ஸ்ரீ மஹா சாஸ்தா

“ஓம் மஹா சாஸ்த்ரே நம” என்ற மந்திரமே தர்ம சாஸ்த்ரு அஷ்டோத்திரத்தின் முதல் மந்திரமாகும்.

மஹாசாஸ்தா என்ற சொற்றொடர் ஸ்ரீ சாஸ்தாவின் மூல மந்திரத்திலுள்ளது. ஸ்ரீ சக்ரார்ச்சன தீபிகா என்ற நூலில் கொடுக்கப் பட்டுள்ளது. இவருக்கு மற்றொரு பெயர் கால சாஸ்தா. கஜாரூட சாஸ்தா என்றும் அழைப்பதும் மரபு.

“ஓம் கால நாசன தத்பராய நம” கால-எமனை, நாசன-அழிக்கும், தத்பர-கருத்துள்ளவன், எம பயம் அகற்றுபவன். சாஸ்தா எமனுக்குக் காலில் விலங்கு பூட்டியதைப் பற்றி ஸ்ரீமணிதாஸர்,

“கர்த்தனாம் கேமன் என்றும் கண்டிருக்கின்றதொரு

தொண்டனுக்காகவே காலனை விலங்கு பூட்டி

துச்சணம் செய்யாமல் அக்ஷணம் இருத்தியுன்

சொல்லுறுதி கேட்க வைத்தாய்”

எனப் பாடியுள்ளார்.

எமனே ஸ்ரீ சாஸ்தாவின் பெயரை உடையோர், அவருடைய பக்தர்கள் முதலியோரைக் கண்டால் அஞ்சுகின்றான். இந்த விஷயம் எமன் தன் தூதுவர்களிடம் சொல்வதாக ஸ்காந்த மஹாபுராணத்தில் (சிவரஹஸ்ய கண்டம், உபதேச காண்டம், அத்யாயம் 26) கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ மஹா சாஸ்தாவை வணங்குவோருக்கு எமபயம் நீங்கும்.

“தவளவாஹனம் திவ்யவாரணம்”, “களபகேசரி வாஜிவாஹனம்” என்றெல்லாம் ஹரிஹரசுதாஷ்டகம் (ஹரிவராசனம் விச்வ மோஹனம்) சாஸ்தாவை கஜாரூடனாக வர்ணித்துள்ளார் ஸ்ரீ கம்பங்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ஐயர்.

“மத்தமாதங்க கமநம் காருண்யாம்ருத பூஜிதம்

ஸர்வ விக்னஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்”

மதம் பொருந்திய யானையை ஊர்தியாகக் கொண்டவரும், கருணை பொழியும் திருமுகத்தினரும், வணங்கத்தக்கவரும, எல்லா துன்பங்களையும் நீக்குபவரும் ஆகிய சாஸ்தாவை வணங்குகிறேன் என்றும்

“த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன்விதம்

கஜாரூடமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்”

த்ரயம்பகபுரம் என்னும் புனித ஸ்தலத்தின் அரசனும், விநாயகர் அருகில் இருப்பவரும், யானையை வாகனமாக கொண்டு தம் பக்தர்களுக்கு அருள்புரிபவராக விளங்கும் சாஸ்தாவை வணங்குகின்றேன் என்றும் ஹரிஹர புத்ர நமஸ்கார ஸ்லோகம் சொல்கின்றதை கேட்கும்போது சாஸ்தாவிற்கு பிரதானமான வாகனம் யானை என்பதை புரிந்துகொள்ளலாம்.

கையில் கதை, அங்குசம்,பாசம், சூலம் போன்ற ஆயுதங்கள் விளங்கும் கரங்களை கொண்டு, மதம் கொண்ட யானை மீது எதிரிகளை அழிப்பவராக திகழ்கிறார். இன்னும் பற்பல நூல்களிலும் கஜ வாகனனாக கூறப்பட்டுள்ளது.

ஆரியங்காவு, த்ரியம்பகபுரம் (திருவாரூர் அருகில்), காஞ்சி காமாக்ஷி சன்னதி, கள்ளிடைகுரிச்சி போன்ற மிக தொன்மையான பாடல்பெற்ற ஸ்தலங்களில் சாஸ்தாவை மதகஜ வாகனனாக காண முடிகிறது. கேரளா, தமிழ் நாட்டில் யானை வாகனம் கொண்ட அய்யனார் (சாஸ்தா) கோவில்கள் கணக்கிலடங்கா. இருப்பினும் மஹா சாஸ்தாவுக்கு கோவில் இது வரை இல்லை. வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோவிலில் தான் முதன்முதல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.