Swamiye

Saranam

Ayyappa

Sunday, 26 December 2021

ஸ்ரீ வீர (அஸ்வாரூட) சாஸ்தா

 ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் கேரளத்தில் அவதரித்தவர். சாஸ்தா அரும்புகழ் பெற விளங்குவதும் கேரளத்தில். சகல தெய்வங்களையும் போற்றித் துதி செய்த ஆசாரியர் சாஸ்தாவை தோத்தரித்திருக்கிறாரா?


சிவபெருமானைத் திருவடியிலிருந்து திருமுடிவரை வருணித்து சிவ பாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் என பகவத்பாதர் அருளியிருக்கிறார். அதில், முதலில் ஈசன் வாஸம் செய்யும் கைலாஸத்தையும், அவனது திவ்யாயுதங்களையும் வாஹன ரிஷபத்தையும் தோத்தரித்து விட்டு, சிவ குமாரர்களை தலைக்கொரு ஸ்லோகத்தால் போற்றுகிறார். இங்கே தான் ஆனைமுகனையும், ஆறுமுகனையும் துதித்தபின் ஒரு முழு ச்லோகத்தால் ஐயப்பனை வாழ்த்தி வழிபடுகிறார்.

விற்கையனாக விசைப்பரியேறிச் செல்வது வீரக்கோலம். புலிப்பாலுக்காகப் பந்தள ராஜகுமாரனாகக் காடு சென்றதே போன்ற தோற்றம். ஆனால் இது மூல ஐயப்பனின் அவதாரத்திலே காணும் நிகழ்ச்சியே. ஆசாரியர் மூல ஐயப்பனை நினைத்தே துதிக்கிறார் எனக் கொண்டால், சிவ கணத் தலைவனாக அவன் வேட்டைக்குச் செல்வதைச் சொல்கிறாரென்று ஆகும். பூத பர்த்தா என்று அவர் சொல்வது, ஈசனின் பூதப்படைக்கு நாயகன் சாஸ்தாவே என்று அவர் கருதுவதைக் காட்டுகிறது.

மூத்த பிள்ளை கணபதியை நாம் சிவ ஸேனா நாதனாக எண்ண, ஆசாரியரோ வீர சாஸ்தாவிற்கு இவ்வுயர்வைத் தருகிறார். (மலையாளத்தில் பூத நாதன் என்று ஐயப்பனைக் குறிப்பிடுதுண்டென்றும், மக்களும் அப்பெயர் வைத்துக் கொள்வதுண்டென்றும் அறிகிறோம்.)

பின்பு, வேட்டையாடும் வீரனிடம் கனிந்து வேண்டுகிறார். பின் இருவரிகளிலே பூதநாதனே! உனக்கு வேட்டை விளையாட்டில் தானே வேட்கை? அப்படியானால் வா, எண்ணங்கள் மண்டி வளர்ந்திருக்கும் என் மனமெனும் காட்டுக்கு! இந்தக் காட்டிலே விருப்பு, வெறுப்பு முதலான பல்வேறு விலங்கு கூட்டங்கள் திரிகின்றன. அவற்றுக்கு அச்சமூட்டி வேட்டையாடிப் புரிவாய்! இப்படிப் பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர்.

கிராத வேடம் கொண்ட பரமேசனிடம் இவ்வாறே தமது சித்த அரணியத்திலே வேட்டையாட, ஸ்ரீசங்கரர் வேண்டுவதை சிவானந்த லஹரியில் காண்கிறோம். இங்கே மூத்த பிள்ளையின் ஸ்தானத்தோடு அப்பனின் ஸ்தானத்தையும் ஐயப்பனுக்கே கொடுத்து விடுகிறார்.

 “துரகவாகனம் ஸுந்தரானனம்” என்று ஹரிஹரசுதாஷ்டகம் (ஹரிவராசனம் விச்வ மோஹனம்) சாஸ்தாவை குதரைமேல் வர்ணித்துள்ளார் ஸ்ரீ கம்பங்குடி குளத்தூர்  ஸ்ரீனிவாச ஐயர். மேலும்

“அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்” என்ற ஸ்லோகத்தில் சத்ருக்களை அழிப்பவனாக சாஸ்தாவை வர்ணித்துள்ளனர்

தமிழ்நாட்டில் பல கிராமங்களில் குதிரை வாகனத்தில் அய்யனார் (சாஸ்தா) கோவில்கள் பல காணலாம். கைகளில் ஆயுதம்  தாங்கியும், மின்னலை  விட  வேகமாக  செல்லும் பரிமீதேறி வீரக்கோலம் பூண்டு தீயவர்களை அழித்தும் மண்ணின் மைந்தர்களை காக்கும் மாவீரன்.

“அஸ்வாரூடையை நம” என்று தர்ம சாஸ்தா அஷ்டோத்திரத்தில் வருவது போல குதிரை வாகனனாகவும் கேதுவின் அம்சம் என்று குறிப்பதற்காகவும் வீர சாஸ்தா கேடையம்-வாளுடன் காட்சி அளிக்கிறார். வேப்பம்பட்டு அஷ்டசாஸ்தா திருக்கோவிலில் தான் வீர சாஸ்தா முதன்முதல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.


0 comments:

Post a Comment

Contact Us

Adress/Street

Sree Ashta Sastha Temple, Veppampattu, Tamil Nadu 602 024, India

Phone number

+91 9444 10 431

Email

info@ashtasastha.org

Google Map

http://bit.ly/ashtasastha