Swamiye

Saranam

Ayyappa

Sunday, 26 December 2021

ஸ்ரீ கல்யாண வரதர்

 ஸ்ரீ கல்யாண வரதர்

சாஸ்தாவிற்கு பற்பல அவதாரங்கள் இருந்தாலும் எங்களுக்கு கல்யாண வரதர் மீது ஒரு தனி பற்று. காரணம்: எங்கள் குருநாதர் உருவாக்கி காஞ்சி மஹா பெரியவர் மடியில் தவழ்ந்த முதல் பஞ்சலோக விக்ரஹம் எங்களின் கல்யாண வரதரே ஆகும்.   19 மார்ச் 1987 அன்று சுமார் 25 நிமிடம் கல்யாண வரதரை பற்றியும் சாஸ்தா அவதார தத்துவங்களை பற்றியும் பல்வேறு கேள்வி கணைகள் தொடுத்து அதன் மூலம் எங்கள் குருநாதருக்கு அருளாணை பிறப்பித்தார் மகாபெரியவர்.


கேரளத்தில் ஆரியங்காவு மற்றும் தகழி போன்ற ஆலயங்களில் சாஸ்தா கல்யாண உத்சவம் இன்றும் நடந்து வருகிறது. ஆனால் ஸ்ரீ பூர்ணா புஷ்காளா சமேத ஹரிஹரபுத்ர ஸ்வாமியின் திருக்கல்யாண வைபவத்தை பாகவத சம்பிரதாயப்படி பஜனை பத்ததியில் "ஸ்ரீ சாஸ்தா திருக்கல்யாண உத்சவம்" முதலில் நடத்தி மகிழும் பாக்கியம் எங்கள் குருநாதருக்கு கிடைத்தது. எங்கள் மாப்பிள்ளை கல்யாணவரதர் போகாத இடமே இல்லை. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தன் கல்யாண உத்சவத்தை தானே நடத்திக்கொண்டார்.

சபரிமலையில் நித்ய பிரம்மச்சாரியாக யோக நித்திரையில் அமர்ந்திருக்கும் பகவானுக்கு ஐயப்பனாக அதாவது மணிகண்டனாக அவதரித்த காலத்தில் திருமணம் கிடையாது. ஆனால் ஆதிகாலத்தில் ஹரிஹரபுத்திரனாக அவதரித்து காந்தமலையில் (கைலையில்)  கொலுவிருக்கும் சாஸ்தாவுக்கு சில அவதாரங்களில் பூர்ணா மற்றும் புஷ்களா என்று இரு தேவியருடன் இருப்பதாகவும் வேறு சில அவதாரங்களில் சத்தியகன் என்ற செல்லப்பிள்ளை மற்றும் பிரபாவதி என்ற தேவியருடன் உள்ளார் என்பது கர்ணபரம்பரையான வரலாறு ஆகும்.

நேபாள தேசத்தை பளிஞன் என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் மந்திர தந்திரங்களில் தேர்ந்தவன், ஒரு கன்னிகையை காளிகாதேவிக்கு அற்பணித்து, அவளருளால் மூப்பு நரை நீங்கி நீண்டகாலம் வாழலாம் என்று கருதி, சிவ பக்தையான ஓர் கன்னிகையை அழைத்து பலியிட துணிந்தான். இதையறிந்த கன்னிகை சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் சாஸ்தாவை அனுப்பி அவளை காத்தருளுமாறு பணிந்தார். சாஸ்தாவும் கன்னிகையை காத்தருளி, மன்னனையும் தவறு செய்வதிலிருந்து தடுத்தாட்கொண்டார். மனம் திருந்திய மன்னன், அழகும் அறிவும் சிறந்து விளங்கும் தம் மகளாம் புஷ்காளாவை சாஸ்தாவுக்கு மணம் முடித்து கொடுத்தான்.

கொச்சி ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த பிஞ்சகன் என்னும் மன்னன் ஓர் சமயம் வேட்டையாடும் நிமித்தம் வனம் சென்றிருந்தபோது, அந்தி சாய்ந்து இருள் சூழ்ந்திட,திரும்பிச்செல்லும் வழி தெரியாது தவித்து நின்றான். அதுசமயம் வனத்தில் திரியும் பூத பிசாசுகணங்கள் மன்னனை துன்புறுத்த தொடங்க, மன்னன் நடுங்கி பூதநாதனை தியானித்தான். அடியார் அபயக்குரல் கேட்டு குறைதீர்க்க விரைந்துவரும் ஹரிஹரசுதன், மன்னனை பூதகணங்களிடமிருந்து விடுவித்து காத்து அருளினான். மனமகிழ்ந்த அரசன், அதிரூபவாதியான தன் குமாரி பூர்ணாவை மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு ஐயனை வேண்டினார்.ஐயனும் பூரணையை கடிமணம் புரிந்து கொண்டான்.

புஷ்களையை மணந்த ஐயன், பிறகு பூர்ணாவையும் மணந்து கொண்டதை அறிந்து சினந்த பளிஞன், மனிதர்களை போல நடந்து கொண்ட நீயும் ஒரு மனிதனாய் பிறந்து பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்று சபித்தான். அதையே ஒரு வரமாக ஏற்றுக்கொண்டு பகவான் மணிகண்டராக அவதரித்து சபரிமலையில் பிரம்மச்சரிய விரதம் பூண்டிருப்பதாகவும் கதைகளில் கூறப்படுகிறது.

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் "பூர்ணா" என்ற நாமத்துக்கு "எங்கும் வியாபித்து இருப்பவள்" என்றும் "புஷ்கரா" என்ற நாமத்திற்கு "எங்கும் நிறைவாகி இருப்பவள்" என்பது  பொருள். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் காந்தமலை ஜோதியாய் பகவான் எல்லா இடத்திலும் பூர்ணமாகவும் புஷ்களமாகவும் விளங்குகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம்.


தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு கல்யாண வரதர் நித்திய மங்களம் அருளட்டும். அதற்க்கு இக்கோவில் துணை நிற்கட்டும்

0 comments:

Post a Comment

Contact Us

Adress/Street

Sree Ashta Sastha Temple, Veppampattu, Tamil Nadu 602 024, India

Phone number

+91 9444 10 431

Email

info@ashtasastha.org

Google Map

http://bit.ly/ashtasastha